கிழக்கில் அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றும் – களனி பல்கலைக்கழக ஆய்வில் முடிவு

வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 59 வீத வாக்குகளால் ஆட்சியைக் கைப்பற்றுமென களனி பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவு நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல்கள் நடைபெறவிருக்கும் 7 மாவட்டங்களிலும் களனி பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவு மாணவர்கள் இக்கருத்துக்கணிப்பை நடத்தியதாக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச, இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

நடைபெறவிருக்கும் மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 59 வீதமான வாக்குகளும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 15 வீதமான வாக்குகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 10 வீதமான வாக்குகளும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸக்கு 8 வீதமான வாக்குகளும், ஜே.வி.பி.க்கு 2 வீதமான வாக்குகளும், ஏனைய கட்சிகளுக்கு 2 வீதமான வாக்குகளும் கிடைக்குமென கருத்துக்கணிப்பு முடிவுகளின் மூலம் தெரியவந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மூன்று ஜனாதிபதித் தேர்தல்கள் உட்பட ஐந்து தேர்தல்களுக்கு களனிப் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவு கருத்துக்கணிப்புக்களை நடத்தியதாகக் குறிப்பிட்ட பேராசிரியர், இந்தக் கருத்துக் கணிப்புக்கள் பிழையற்ற சரியான தகவல்களையே வழங்கியிருப்பதாகவும் கூறினார். தேர்தல் நடைபெறவிருக்கும் 7 மாவட்டங்களிலும் 3500 பேரிடம் நேரடியாக இக்கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 75 மாணவர்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று இக்கருத்துக்கணிப்பை நடத்தியிருந்தனர்.

தாம் நடத்திய கருத்துக்கணிப்புக்கு அமைய கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்குகள் மூன்றாகப் பிரிவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், ஏனைய இரண்டு மாகாண சபைகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்றும் கூறினார்.

மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 33 சதவீதமான வாக்குகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 29 சதவீதமான வாக்குகளும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 21 சதவீதமான வாக்குகளும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 10 சதவீதமான வாக்குகளும், ஜே.வி.பி.க்கு ஒரு வீதமான வாக்குகளும் கிடைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தொடர்ந்தும் காணப்படுவதாகவும், கருத்துக்கணிப்பில் பங்கெடுத்தவர்களில் 60 வீதமானவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாகத் தேர்ந்தெடுத்திருப்பதாகவும் பேராசிரியர் கூறினார்.

கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 88 சதவீதமான வாக்குகளும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 24 சதவீதமான வாக்குகளும், ஜே.வி.பி.க்கு 2 சதவீதமான வாக்குகளும். முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட ஏனைய கட்சிகளுக்கு 4 சதவீதமான வாக்குகளும் கிடைக்குமென கருத்துக்கணிப்பில் சுட்டிக்காட்டப்ப ட்டுள்ளது.

அநுராதபுரம் மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 76 சதவீத வாக்குகளும், , ஐக்கிய தேசியக் கட்சிக்கு 18 சதவீதமான வாக்குகளும், ஜே.வி.பி., முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒரு சதவீதமான வாக்குகளும் கிடைக்குமென களனிப் பல்கலைக் கழகத்தின் கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகள் பயனளிப்பதாக 60 சதவீதமானவர்கள் கூறியுள்ளனர். வீதி புனரமைப்பு உள்ளிட்ட உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகள் தமக்குப் பயன்மிக்கதாக உள்ளதென்றும் கருத்துக் கணிப்பில் கலந்துகொண்டவர்கள் கூறியுள்ளனர். கடந்த காலங்களில் நடத்திய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து பின்சென்றுள்ளமையைக் காணக்கூடியதாக உள்ளது என்றும் பேராசிரியர் கூறினார்.

கருத்துக் கணிப்பில் பங்கெடுத்தவர்களில் 60 சதவீதமானவர்கள் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதற்கு அடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை 9 சதவீதமானவர்களும், சஜித் பிரேமதாசவை 9 சதவீதம் முதல் 12 சதவீதமானவர்களும் செல்வாக்கு மிக்க தலைவர்களாகத் தேர்ந்தெடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Advertisements

Comments are closed.

%d bloggers like this: