“கிழக்கு தேர்தல்” வாக்கு வேட்டையில் அரசியல் கட்சிகள் முடிவுகள் எவ்வாறு அமையும்..?

கிழக்கு மாகாண சபை தேர்தலில் எந்தக் கட்சி அறுதிப் பெரும்பான்மையினைப் பெற்று ஆட்சி அமைத்துக் கொள்ளும் என்பதில் உறுதியான ஒரு நிலைப்பாடு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள், வேட்பாளர்களிடையே இல்லாமல் இருக்கின்றது.

ஏனெனில், இத் தேர்தலில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையினை பெற்றுக் கொள்ளமாட்டாது. கிழக்கு மாகாண சபை தேர்தல் ஒரு முத்தரப்பு போட்டியாக உள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,  ஆகியவற்றுக்கிடையே தான் அதிகாரத்திற்கான போட்டி காணப்படுகின்றது.கிழக்கு மாகாண சபைத் தேர்தல் இன ரீதியான தேர்தலாக பார்க்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி தமிழர்களின் வெற்றியாகவும் முஸ்லிம் காங்கிரஸின் வெற்றி முஸ்லிம்களின் வெற்றியாகவும் நோக்கப்படுகின்ற அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றி ஜனாதிபதியின் அல்லது அரசாங்கத்தின் வெற்றியாகவே பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழ் பேசும் மக்கள் தங்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இனப்பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்க வேண்டும் என சுய நிர்ணய உரிமைகளை கோரி நிற்கின்றனர். இக்கோரிக்கை தொடர்பில் தமிழர்களும் முஸ்லிம்களும் எவ்வாறு நடந்து கொள்ளப் போகின்றார்கள் என்பது இலங்கை அரசியலில் முக்கிய இடத்தினை வகிக்கப் போகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியினை அமைத்துக் கொள்ளுமாயின் அது அரசாங்கத்தின் மீது சர்வதேச நாடுகளினால் முன்னெடுக்கப்படும் அழுத்தங்களை குறைப்பதற்கு வழியமைத்து விடும்.ஏனெனில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பிரச்சினைகள் இல்லை. ஒரு சிலர் வேண்டுமென்றே நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள் என்று அரசாங்கம் சர்வதேச நாடுகளுக்கு தெரிவிக்கும். இதனால் சுய நிர்ணயம், உரிமைகள் போன்ற கோசங்கள் அதன் இலக்கை அடைந்து கொள்வதில் பலத்த சிரமங்களை எதிர்நோக்கும்.ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தினை தனித்து பெற்றுக் கொள்ளாது சிறுபான்மையின கட்சி ஒன்றின் ஆதரவுடன் அமைத்துக் கொள்ளுமாயின் இனப்பிரச்சினைக்கான தீர்வினை முன்வைக்க வேண்டி ஏற்படும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஆட்சி அமைத்துக் கொள்ளுமேயாயின் சர்வதேச நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் கழுத்தைப் பிடித்துக் கொள்ளும். அதிலிருந்து விடுபட வேண்டுமாயின் கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த வேண்டி ஏற்படும்.ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஆட்சியை அமைத்துக் கொள்ளும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சியும் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து கொண்டு அரசாங்கத்திற்கெதிரான அழுத்தங்களை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடும் மிக பலமுடைய எதிர்க்கட்சியாக காணப்படும்.

2012.09.08 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபை தேர்தலின் பின்னர் இலங்கை அரசியலில் மேற்சொன்னவாறு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகளின் செல்வாக்கு எவ்வாறு அமையும் என்பதனை   பின்வருமாறுஅவதானிக்கலாம்.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம் காங்கிரஸிற்கும் தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சிங்களப் பிரதேசங்கில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கும் அதிக செல்வாக்குகள் காணப்படுகின்றன.அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதிகூடிய வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் இம் மாவட்டத்தில் தமிழர்கள், சனத் தொகையில் மூன்றாம் நிலையில் இருக்கின்றார்கள்.ஆதலால் முஸ்லிம்களினது வாக்குகள், சிங்களவர்களினது வாக்குகளை விட சுமார் 30 ஆயிரம் அதிகமாகும். இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கான போட்டி முஸ்லிம் காங்கிரஸிற்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கும் இடையே காணப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சுமார் 55 ஆயிரம் சிங்கள வாக்காளர்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில்  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் தமிழ், முஸ்லிம் வேட்பாளர்கள் சுமார் 30 ஆயிரம் வாக்குகளைப பெற்றுக் கொண்டால், சுமார் 85 ஆயிரம் வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அம்பாறை மாவட்டத்தில் வெற்றிபெறும். தமிழ், முஸ்லிம் வேட்பாளர்கள் பெற்றுக் கொள்ளும் 30 ஆயிரம் வாக்குகளில் முஸ்லிம் பிரதேசங்களில் இருந்து சுமார் 25 ஆயிரம் வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இவ்வாறு இருக்கின்றபோது முஸ்லிம் காங்கிரஸ் சுமார் 70 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும். முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் வெற்றிபெற வேண்டுமேயாயின் முஸ்லிம் பிரதேசங்களில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு அளிக்கப்படும் வாக்குகள் சுமார் 20 ஆயிரத்திற்கும் குறைவாக இருக்குமாயின் முஸ்லிம் காங்கிரஸிற்கான வாக்குகள் 75 ஆயிரத்தை விடவும் அதிகமாக இருக்கும். ஆகவே அம்பாறை மாவட்டத்தின் வெற்றி முஸ்லிம் காங்கிரஸிற்கா அல்லது  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கா? என்பதனை முஸ்லிம்களின் வாக்குதான் தீர்மானிப்பதாக இருக்கும்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும்வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற வேண்டுமாயின் அவர் சுமார் 25 ஆயிரத்திற்கும் குறையாத வாக்குகளை பெறல் வேண்டும்.அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் 7 சிங்கள வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். இவர்களும் ஒரு வேட்பாளரை உறங்கும்வேட்பாளராக மாற்றி உள்ளனர். சிங்கள வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அம்பாறைத் தொகுதி இரண்டு வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. வலயத்திற்கு தலா மூன்று வேட்பாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள். இவ்வேட்பாளர்கள் சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்வார்கள். இவ்வாறு பெறும்போது ஐக்கிய  மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் தமிழ், முஸ்லிம் வேட்பாளர்கள் 25  ஆயிரத்திற்கும் அதிகமான விருப்பு வாக்குகளை பெற்றுக் கொண்டால் மாத்திரமே வெற்றி பெற முடியும். இதற்கு குறைவாக விருப்புத் தெரிவு வாக்குகள் அமையும்போது, அது சிங்கள வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பினை அதிகரித்துவிடும்.

மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் இங்கு தமிழர்கள்தான் பெரும்பான்மையாக உள்ளார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் அதிக செல்வாக்குகள் உள்ளன. இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே  கைப்பற்றிக்கொள்ளும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களை பெற்றுக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் இரண்டிற்கும் குறையாத ஆசனங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.திருகோணமலை மாவட்டத்தில் மூவின மக்களும் சமமான தொகையில் உள்ளார்கள். இங்கு முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம் காங்கிரஸிற்கும் தமிழ் பிரதேசங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் செல்வாக்கு அதிகமாக உள்ளன.

திருகோணமலையில் கடந்த மாகாண சபைத் தேர்தலை விடவும் இம்முறை ஐ.தே.க. வுக்கு செல்வாக்கு அதிகரித்து காணப்படுகின்றது. தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அதிகமான மக்கள் கலந்து கொண்டு வருகின்றார்கள்.எப்படியாக இருந்தாலும் கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தை ஐ.தே. கட்சி பெற்றுக் கொள்வதற்கு  வாய்ப்புக்கள் அதிகம் இல்லை. அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் தனித்து ஆட்சியமைக்க முடியாது.

இந்நிலையில் தேர்தலின் பின்னர் வெற்றி பெற்றவர்களிடையே ஆட்சியை அமைத்து கொள்ள விரும்பும் தரப்பினர் பேரம்பேசும் நிமைகள் ஏற்படும் சாத்தியங்களும் அதிகமாகவே உள்ளன. மேலும் வாக்காளர்கள் சோரம் போகாமல் இருக்கக் கூடிய வேட்பாளர்கள்,  சமூகத்தின் மீது பற்றுள்ள வேட்பாளர்கள், திறமையான வேட்பாளர்கள் என பல விடயங்களை அவதானித்து வாக்களிக்க வேண்டும்.யார் வெற்றி பெற்றால் தமது சமூகத்திற்கு நன்மைகள் கிடைக்கும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தல் வேண்டும். யார் வெற்றி பெற்றால் தமக்கென்ன என்று இருந்து விடவும் முடியாது. இத்தேர்தலில் அனைவரும்வாக்களிப்பது அவசியமாகும்.

                                                                                                                                                                              S. றிபான்
Source : JM

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: